Sunday, April 29, 2010
பேராயிரம் கொண்டான்

தமிழ்க் குடிக்கு என்றுமே கற்பனையும் தெய்வீகமும் அதிகம். வட மொழியை தேவர்களது மொழியாக கருதினாலும், தெய்வ துதிகளை தமிழாக்கம் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. சமயத்தில், துதிகளை வட மொழியிலேயே பாடினாலும், அவற்றிற்கு பெயர் மட்டுமாவது தமிழில் வைத்து விடுவர்.
வட மொழியில் 'விஷ்ணு சஹஸ்ர நாமம் " என்ற பரந்தாமனின் புகழ் பாடும் ஆயிரம் நாமங்கள் கொண்ட துதி உண்டு. நம் வைணவ நாயகர்களான ஆழ்வார்கள் துதியை சமஸ்கிருதத்தில் சொன்னாலும், தலைப்பை அருமையாக தமிழில் வைத்தனர். அதுதான் " பேராயிரம்".
இந்த பேராயிரம் என்றால் என்ன ? அதன் மகிமை என்ன ?
மகாபாரதப் போர்க்களத்தில் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் உத்தராயணத்தை எதிர் நோக்கி உடலில் உயிர் தாங்கிக் கிடக்கிறார். பேரன் அடித்த பாணங்கள் உடலைச் சல்லடையாய்த் துளைத்தும் தாய் கங்கா தேவி அளித்த வரத்தால் நினைத்த நேரத்தில் உயிர் விடும் சக்தி பெற்றவர்.
இங்கே அஸ்தினாபுரத்தில் போர் முடிந்து மன்னன் தருமன் முடி சூடுகிறான். ஆனாலும் அவன் மனதில் ஒரு கிலேசம். பதினெட்டு இலட்சம் க்ஷத்திரியர்களின் மரணத்திற்குத் தான் காரணமாகி விட்டோமோ என்று துடித்தான். துயரம் அவனை வாட்டியதைக் கண்டு வாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணன் அவனை போர்க்களத்தில் கிடக்கும் பாட்டனாரிடம் அழைத்துச் செல்கின்றான்.
தருமன் தன கொடுஞ்செயலால் போர் விளைந்ததையும் தன்னால் பெண்கள் மணாளனை இழந்ததையும் கூறி தன்னால் தருமம் வீழ்ந்து விடுமோ என்று அஞ்சுவதையும் கூறி புலம்பிப் பதை பதைத்து நின்றான். பீஷ்மர் பேரனுக்கு அங்கே தருமத்தின் சூட்சுமத்தையும் , அதனை மன்னன் எவ்வாறு காக்க வேண்டும் என்றும் விரிவாக விளக்கினார்.
தருமனுக்கு அங்கே அந்த விஷயத்தில் ஆறுதல் ஏற்படினும், ஆன்மீக விஷயத்தில் ஒரு புதிய சந்தேகம் தலை தூக்கிற்று. அந்தச் சந்தேகத்தின் காரணமாகவே பீஷ்மர் தன பேரனுக்கு இந்த பேராயிரத்தை உபதேசித்தார்.
தருமனின் சந்தேகந்தான் என்ன ?
ஒன்றேயான சிறந்த தெய்வம் யார் ?
அவருக்குரிய மேலான நிலை எது ?
அவரை எப்படிப் பாடியும் துதித்தும் மானுடர் மங்களம் பெறுவர் ?
எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்தது எது ?
எந்த ஜபத்தினால் மனிதன் உலக பந்தங்களில் இருந்து விடுபடுகின்றான் ?
இந்த கேள்விக்கு பீஷ்மரிடம் கிடைத்த பதில் தான் புகழ் பெற்ற விஷ்ணு சஹஸ்ர நாமம் என்னும் பேராயிரம். ஒரே தெய்வம், உலக நாயகன் , அளவிலன், புருஷோத்தமனான ஸ்ரீமன் நாராயணனே என்றும், அவனைப் போற்றும் ஆயிரம் நாமங்கள் மனிதனை உய்விக்கும் என்றும் அதனைக் கேட்கும் படியும் தருமனைத் தூண்டிய வீடுமர், அற்புதமான அந்த ஆயிரம் பேர்களை பிந்தை உலகின் நற்பேற்றுக்காக அங்கே அதை திறம்பட மொழியவும் செய்தார்.
பிறக்கப் போகும் கலியுகத்தின் முக்தி நெறி நாம சங்கீர்த்தனமே என்று உணர்ந்த அப் பெருந்தகை , தாமரைக் கண்ணனாகிய மாலோனை துதிகள் மூலம் வழிபடுவதே சிறந்த தர்மம் என்பது தன கருத்தாக அங்கே மொழிகிறார். இந்நாமங்கள் உலகவழக்கில் இருந்த போழ்தும், ரிஷிகளால் பாடப்பெற்ற போழ்தும் , அதனைத் திறம்பட செம்மையாய் உரைத்த பெருமை வீடுமரையே சேரும். அதனை ஆங்கே காவியத்தில் புகுத்திய திறம் வியாசரையே சேரும்.
ஓம் விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ என்று தொடங்கும் அந்த பேராயிரம் கேட்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி " என்ற போது கோதை நாச்சியார் நாம சங்கீர்த்தனத்தையே சொன்னாள் போலும் !
இந்த சீரிய துதியைக் கேட்க , முன் வினை நல்வினை ஆக இருத்தல் வேண்டும். அமரர் எம் எஸ் அவர்கள் பாடிய பேராயிரம் இதோ கீழே. சொடுக்கி இசையைப் பெறலாம்.
பாகம் ஒன்று
No comments:
Post a Comment